உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னணி இந்து அமைப்புகளில் ஒன்றாக அகில பாரதிய அகாரா பரிஷத் திகழ்கிறது. அதின் தலைவர் கடந்த திங்கள்கிழமை அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது தற்கொலைக்கு ஆசிரமத்தில் இரண்டாவது முக்கிய நபர்களான ஆனந்த சிரி, ஆதிய திவாரி, சந்தீப் திவாரி ஆகியோர் தான் காரணம் என கடிதம் எழுதியுள்ளார்.
தற்கொலையின் காரணம்
மேலும் பெண்ணுடன் இருப்பது போன்ற போலியான புகைப்படத்தினை வைத்து தன்னை மன அழுத்தத்திற்கு ஆளாக்கியதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கடிதம் மட்டுமின்றி அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அதிலும் ஒரே குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இவரது தற்கொலை குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த மடாதிபதி
இந்நிலையில் பாகம்பரி மடத்தின் அடுத்த மடாதிபதி யார் என தேர்வு செய்வதற்காக, இன்று (செப்.30) நிரஞ்சனி அகாராவின் நிர்வாகிகள், ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
அதில் பாகம்பரி மடத்தில் மஹந்த் நரேந்திர கிரியின் வாரிசாகவும், மடாதிபதியாகவும் பல்பீர் கிரி இருப்பார் என்று முடிவு செய்துள்ளனர். மேலும் இவர் பிரயாக்ராஜில் உள்ள லெதே அனுமன் கோயிலின் தலைவராக இருப்பார் என முடிவு செய்துள்ளனர்.
மேலும் பாகம்பரி மடம் மற்றும் லெத்தே அனுமன் கோயிலின்கீழ் உள்ள 30 பிகா நிலங்களை கவனித்துக்கொள்வதற்காக ஐந்து பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவினையும் தேர்வுசெய்துள்ளனர்.
பொறுப்பேற்பு
இதையடுத்து, பல்பீர்கிரி வருகிற அக்டோபர் ஐந்தாம் தேதி அன்று பாகம்பரி மடத்தின் மடாதிபதியாகவும், லெதே அனுமன் கோயிலின் தலைவராகவும் பொறுப்பேற்கவுள்ளார்.
பல்பீர்கிரி கடந்த 2005ஆம் ஆண்டில் சன்னியாச வாழ்க்கைக்குள் நுழைந்தார் என்பதும், அவருக்கு ஹரித்வாரில் நரேந்திர கிரியால் 'தீக்ஷா' வழங்கப்பட்டது என்பதும், தற்போது ஹரித்வாரில் உள்ள பில்கேஷ்வர் மகாதேவ் கோயிலை கவனித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'காங்கிரஸிற்கு கல்தா, பாஜகவுக்கு நோ'- அமரீந்தர் சீக்ரெட்!