மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று (ஜூலை 25) தனியார் கேளிக்கை விடுதியில் புகுந்த பஜ்ரங் தள் அமைப்பினர், கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதுபோன்ற கொண்டாட்டங்கள் கலாச்சாரத்திற்கு எதிரானது எனக்கூறி, மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுதொடர்பாக மங்களூரு காவல் ஆணையர் இன்று, சம்மந்தப்பட்ட கேளிக்கை விடுதியில் நேரில் விசாரணை நடத்தினார். பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "சுமார் 6 இளைஞர்கள் கேளிக்கை விடுதிக்குள் சென்று, சிறார்களுக்கு மதுபானம் வழங்கப்படுகிறதா? என்று பவுன்சரிடம் விசாரித்துள்ளனர்.
கேளிக்கை விடுதி மீது எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை. சரியான நேரத்தில் போலீசார் சென்றதால், எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. சம்மந்தப்பட்ட மாணவர்களிடம் தகவலை சேகரித்துள்ளோம்.
இதில் சிறார்கள் சம்மந்தப்பட்டிருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்துக்கும், கர்நாடகாவில் முத்தம் கொடுக்கும் சவாலில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை" என்று கூறினார்.
இதையும் படிங்க:குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக உயர்வு