ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காமில் உள்ள பாட்லிபாக் பகுதியைச் சேர்ந்த ருக்சானா என்பவருக்கு நவம்பர் 3ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அப்போது மருத்துவர்கள் குழந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து மருத்துவக்கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கு ருக்சானா அனுமதி அளித்துள்ளார்.
அந்த வகையில் 13 நாள்கள் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நாள்களில் பெற்றோருக்கும், செவிலியர்களுக்கும் குழந்தையை பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதன்பின் மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக ருக்சானாவிடம் தெரிவித்துள்ளனர். இந்த குழந்தையின் உடலை குடும்பத்தார் வங்கிச்சென்று முறைப்படி அடக்கம் செய்துள்ளனர். இதனிடையே ருக்சானாவுக்கு மருத்துவமனையில் இருந்து குழந்தை பிறந்ததற்கான ஆவணங்கள் கொடுக்கப்பட்டன.
அதில், குழந்தை ஆண் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போதுதான் சர்ச்சையே ஆரம்பித்தது. ஏனென்றால், ருக்சானா அடக்கம் செய்தது பெண் குழந்தையைதான். இதன்காரணமாக குடும்பத்தார் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியபோது பெண் குழந்தையே பிறந்ததாக திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ருக்சானா போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உடலை டிஎன்ஏ சோதனைக்காக தோண்டி எடுத்துள்ளனர். அதன்பின் உடல் டிஎன்ஏ சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. முடிவுக்காக மருத்துவமனை நிர்வாகமும், பெற்றோரும் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: 10 நாட்களில் உயிரிழப்பேன்... 3 நாட்களில் உயிர்த்தெழுவேன்... பாஸ்டர் பகீர்...