உத்தரப் பிரதேசம் (Uttar Pradesh): உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயிலானது கட்டப்பட்டு, அதன் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து உள்ளது. இக்கோயிலில் 2024 ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், இதில் பிரதமர் மோடி பங்கேற்று, ராமர் சிலையை கோயில் கருவறைக்குள் எடுத்து வர உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான அரசியல் தலைவர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், மடாதிபதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். எனவே, கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராமர் கோயிலில் தரிசனத்திற்காக பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளதால், அயோத்தி ரயில்வே நிலையத்தை புனரமைக்கும் பணியானது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏனெனில், பொதுமக்கள் அயோத்தி வருவதற்கு ரயில் சேவையைத்தான் அதிகம் பயன்படுத்துவர். அந்த வகையில், இந்த அயோத்தி ரயில் நிலையத்தின் புனரமைப்பு பணிகள் மூன்று கட்டமாக நடைபெற்று வரும் நிலையில், அதன் முதற்கட்டப் பணிகள் தற்போது முடிவடைந்து உள்ளது. இந்த நிலையில், இந்த ரயில் நிலையத்தை பிரதமர் மோடி வருகிற 30ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
எனவே, தற்போது ரயில் நிலையத்தின் பெயர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, அயோத்தி ரயில் சந்திப்பு என்ற பெயரில் இருந்த ரயில் நிலையம், தற்போது அயோத்தி தாம் சந்திப்பு என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டு உள்ள இந்த ரயில் நிலையம், பார்ப்பதற்கு ராமர் கோயில் போன்ற வடிவமைப்பில் அமைந்துள்ளது.
இந்த ரயில் நிலையத்தை புனரமைக்கும் திட்டத்திற்கான மொத்த செலவு 430 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த ரயில் நிலையம், தினமும் ஒரு லட்சம் பயணிகள் வரை வந்தாலும் கையாளும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இங்கு லிஃப்டுகள், எஸ்கலேட்டர்கள், உணவகங்கள், பயணிகள் ஓய்வு அறைகள், குழந்தை பராமரிப்பு அறைகள், ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் பெண் ஊழியர்கள் தங்கும் இடங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த ரயில் நிலையத்தில் பகலில் குறைந்த அளவிலான மின்சாரமே போதுமானது. ஏனெனில், இயற்கை ஒளியை உள்ளே அனுமதிக்கும் வகையில், இதன் வடிவமைப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், தண்ணீர் சிக்கனத்திற்காக, மழை நீர் சேகரிப்பு வசதியும் இங்கு உள்ளது. இதையடுத்து, இங்கு பயணிகளின் வசதிக்காக சுற்றுலா தகவல் மையமும் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் காரணமாக, ராமர் கோயில் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள் பற்றிய தகவல்களை பயணிகள் சிரமம் இன்றி அறிந்து கொள்ள முடியும்.
இத்தகைய அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும் இந்த ரயில் நிலையத்தை, வருகிற 30ஆம் தேதி பிரதமர் திறந்து வைப்பதுடன், அதே நாளில் அயோத்தி மற்றும் டெல்லி இடையே வந்தே பாரத் ரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பொருட்கள் சேதம்; 160 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு கோரி மனு!