ஷிவமோகா: கர்நாடக மாநில சட்டசபை தேர்தல், வருகிற மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் அனல் பறக்க நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஆளும் பாஜக கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பாலானவர்கள் மாறி வருகின்றனர். அந்த வகையில், கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் அயனூர் மஞ்சுநாத், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இன்று (ஏப்ரல் 19) அவரது புதிய அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அயனூர் மஞ்சுநாத், “இன்று, நான் சபாநாயகரைச் சந்திக்கப் போகிறேன். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். சபாநாயகர் எனக்கு நேரத்தை கொடுத்துள்ளார். நான் இன்று ஹூப்ளிக்கு பயணம் செய்ய உள்ளேன். அங்கு, எனது ராஜினாமாவை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கிறேன். அதேநேரம், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்ய உள்ளேன்.
நாளை (ஏப்ரல் 20), ஷிவமோகா சட்டமன்றத்தொகுதியில் நிற்பதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளேன். மதியத்துக்குள், எந்த கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளேன் என்பதை நான் அறிவிப்பேன். ஒவ்வொருவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் நான் போட்டியிடுகிறேன். என்னை நம்பி மக்கள், என்னை தேர்ந்தெடுப்பார்கள் என்பதில் நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் ஷிவமோகா தொகுதியில் இருந்து தொகுதியைப் பெற மஞ்சுநாத் விரும்புவதாகவும், ஆனால், பஜ்ரங் தள் ஆதரவாளர் ஹர்ஷா படுகொலை செய்யப்பட்ட இந்த தொகுதிக்கு பாஜக சீட் ஒதுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஈடிவி பாரத் செய்திகளுக்குக் கிடைத்த ஆதாரங்களின்படி, ஷிவமோகா தொகுதி அயனூர் மஞ்சுநாத்துக்கு ஒதுக்காததாலேயே, தான் பாஜகவில் இருந்து விலகுவதாக மஞ்சுநாத் அறிவித்ததாகத் தெரிகிறது.
மேலும், இது குறித்து பேசிய மஞ்சுநாத், “நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன். எனக்கு சீட் கொடுக்காததால் கட்சியில் இருந்து விலகவில்லை. இந்த நகரத்தின் வளர்ச்சிக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளேன். முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக நான் மட்டுமே அறிக்கை அளிக்கிறேன்” எனவும் கூறினார். அதேநேரம், தற்போதைய ராய்ச்சூர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான பி.வி.நாயக், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
இதற்காக தனது ராஜினாமா கடிதத்தை கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமாரிடம் நாயக் அளித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ராய்ச்சூர் மக்களவை உறுப்பினராக முதன்முதலில் வென்றார். மீண்டும், 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதன் பிறகு அம்மாவட்ட காங்கிரஸ் தலைவராக பி.வி.நாயக் செயல்பட்டார்.
இந்த தேர்தலில் தேவதுர்கா தொகுதியில் நாயக்கை நிறுத்த காங்கிரஸ் ஒப்புக்கொண்ட நிலையிலும், மானவி தொகுதியிலேயே போட்டியிட நாயக் விருப்பம் தெரிவித்தார். இருப்பினும், இதனை காங்கிரஸ் தலைமை மறுக்க, நாயக் அதிருப்திக்கு உள்ளானார். இந்த நிலையில்தான் பாஜகவில் இணைந்துள்ளார், நாயக். ஏற்கனவே, மானவி தொகுதியில் வலிமையான வேட்பாளரைத் தேடி வந்த பாஜகவுக்கு நாயக் வலு சேர்த்துள்ளதால், விரைவில் மானவி தொகுதியில் பி.வி.நாயக் பாஜக சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Pulikeshi Nagar: கர்நாடக தேர்தலில் களமிறங்கும் அதிமுக.. வேட்பாளரை அறிவித்த ஈபிஎஸ்!