திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவின் ஹரிபாட் நகராட்சியில் உள்ள வாத்து பண்ணையில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்காரணமாக ஹரிபாட் நகராட்சி முழுவதும் உள்ள பறவைகளை அழிக்கும் பணியை மாவட்ட அதிகாரிகள் தொடங்கினர். முன்னதாக பண்ணையில் உயிரிழந்த பறவைகளின் மாதிரிகளை போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பியதில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடரந்து, அக்டோபர் 28ஆம் தேதி முதல் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பண்ணையிலிருந்து 1 கிமீ சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து பண்ணைகள் மற்றும் வீடுகளில் உள்ள பறவைகளையும் அழிக்க மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டார். அதன்படி 20,471 பறவைகள் அழிப்பட்டுவருகின்றன. அதற்காக ஆலப்புழா மாவட்ட விலங்குகள் பாதுகாப்பு அலுவலர் டி.எஸ்.பிந்து தலைமையில் தாலா 10 உறுப்பினர்களை கொண்ட குழு அழிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது.
இந்த பணிகள் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பாதிக்கப்பட்ட பகுதியில் பறவைகளை கைமாற்ற தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹரிபாட் நகராட்சி மற்றும் அருகிலுள்ள பல்வேறு ஊராட்சிகளில் வாத்து, கோழி, காடை உள்ளிட்ட பறவைகளின் இறைச்சி மற்றும் முட்டைகளை உண்ணவும், விற்பனை செய்யவும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். இங்கிருந்து மற்றப்பகுதிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால் மக்களும் விழிப்புர்வுடன் அதிகாரிக்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுகொண்டுள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல்