அகமதாபாத்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரில் மூன்று ஒருநாள் போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டன.
முதல் போட்டி நாக்பூரிலும், இரண்டாவது போட்டி டெல்லியிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரிலும் நடைபெற்றது. மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவில், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று(மார்ச்.9) தொடங்கியது.
இந்தப் போட்டியைக் காண ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருவரும் மோடி ஸ்டேடியத்திற்கு வருகை தந்தனர். மைதானத்தில் நுழைந்த இருநாட்டு பிரதமர்களும் இருநாட்டு வீரர்களையும் சந்தித்தனர்.
இந்திய அணி வீரர்களை கேப்டன் ரோகித் சர்மா பிரதமர் மோடிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பிரதமர் மோடி வீரர்களுடன் கைகுலுக்கி உற்சாகப்படுத்தினார். ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு பிரதமர் ஆண்டனி கைகொடுத்து உற்சாகப்படுத்தினார்.
பிறகு இரநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. போட்டி தொடங்கிய நிலையில், பிரதமர்கள் இருவரும் இணைந்து போட்டியை கண்டுகளித்தனர். இருவரும் சுமார் 30 நிமிடங்கள் போட்டியை கண்டு ரசித்துவிட்டு புறப்பட்டு சென்றதாக தெரிகிறது. இவர்களது வருகையையொட்டி ஸ்டேடியத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த புதுப்பிக்கப்பட்ட மோடி ஸ்டேடியத்தில் கடந்த ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. மேலும் இந்த ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி பெயரை வைத்த பிறகு, இங்கு டெஸ்ட் கிரிக்கெட்டை பிரதமர் மோடி பார்த்தது இதுவே முதல் முறை என்று தெரிகிறது.
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தார். கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-ஆஸ்திரேலிய உறவுகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றே கூறலாம். இந்த சூழலில் ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வந்துள்ளார். அவருடன் அந்நாட்டு அமைச்சர்கள் உள்ளிட்டோர் அங்கிய குழுவும் இந்தியா வந்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி முதல் முறையாக இந்தியா வந்துள்ளார்.
அகமதாபாத்திற்கு வருகை தந்த அவருக்கு அம்மாநில அரசு உற்சாக வரவேற்பு அளித்தது. பிறகு ஆஸ்திரேலிய பிரதமர் மகாத்மா காந்தி வசித்த சபர்மதி ஆசிரமத்தை சுற்றிப்பார்த்தார். பின்னர் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார், அங்கு நடந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திலும் பங்கேற்றார்.
ஆஸ்திரேலிய பிரதமர் இந்த பயணத்தில் இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார் என்று தெரிகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "ஐஐடிக்கு செல்ல விரும்பினால் நாட்டை காப்பது யார்?" - ராணுவ பயிற்சி இளம்பெண் சோனியா!