மகாராஷ்டிரா: மராட்டிய மாநிலத்தின் உள்ள அவுரங்காபாத் நகரின் பெயரை சத்திரபதி சாம்பாஜி நகர் என மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவுரங்காபாத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நெடுநாட்களாக மராட்டியத்தில் ஒலித்து வருகிறது.
இதுதொடர்பாக மராட்டிய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநில அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற ஒப்புதல் வழங்கியது. இனி அவுரங்காபாத் நகர், சத்திரபதி சாம்பாஜி நகர் என அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஒஸ்மானாபாத் நகருக்கும் தாராஷிவ் என பெயர் மாற்றம் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மராட்டிய துணை முதலமைச்சர் தேவந்திர பட்நாவிஸ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதேநேரம் இந்த அறிவிப்புக்கு உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா அணி நன்றி தெரிவித்துள்ளது.
கடந்த 1988 ஆம் ஆண்டு பால்சாகேப் தாக்கரே, சத்திரபதி சாம்பாஜி நகர் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அது முதல் 35 ஆண்டு கால சிவசேனாவின் போராட்டம் முடிவு வந்துள்ளதாகவும் பால்சாகேப் தாக்கரேவின் கனவு நினைவாகி உள்ளதாகவும் கூறி அக்கட்சி உறுப்பினர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே இந்த பெயர் மாற்றம் பொது மக்களிடையே பல்வேறு குழப்புகளையும், நிர்வாகச் சிக்கல்களையும் ஏற்படுத்தி உள்ளது. அவுரங்காபாத் நகரின் பெயர் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக இல்லை, ஒட்டுமொத்த மாவட்டத்தின் பெயரும் சத்திரபதி சாம்பாஜி நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதா என பொது மக்கள் குழம்பி போய் உள்ளனர்.
மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையிலும், அவுரங்காபாத்தின் பெயர் மாற்றத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாக மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இது பெரும் குழப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு மேலும் 4 விருதுகள் - படக்குழு கொண்டாட்டம்!