ஆந்திராவில் உள்ள கோதாவரி மாவட்டம் கொத்தப்பேட்டையில் உள்ள கனரா வங்கியில் 322 கிராம் தங்கமும், 9.25 லட்ச ரூபாய் பணமும் திருடுபோனதாக அவ்வங்கி மேலாளர் சிவக்குமார் காவல் துறையிடம் புகாரளித்தார்.
வங்கி ஊழியர்கள் நேற்று (டிச.7) மதியம் உணவு இடைவேளைக்கு சென்ற சமயத்தில் இந்தத் திருட்டு சம்பவம் நடந்திருக்கிறது. சம்பவத்தன்று, பிற ஊழியர்கள் உணவு இடைவேளைக்குச் சென்றதால், வங்கியில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றிய துளசி சுரேஷிடம், வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த பணம், நகையின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஊழியர்கள் திரும்பி வந்து பார்க்கும் போது சுரேஷை காணவில்லை. எங்கே சென்றார் என அறிய அவருடைய செல்போனுக்கு தொடர்புகொண்ட நிலையில், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரிய வந்தது.
நகைகளும் பணமும் காணாமல்போன நிலையில், சுரேஷும் மாயமானதால் அங்கிருந்த ஊழியர்களுக்கு, உதவியாளர் சுரேஷ் மீது சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து, மேலாளர் சிவக்குமார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது உதவியாளர் துளசி சுரேஷ் சிசிடிவியை அணைத்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக புகாரளிக்கப்பட்டது.
இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக அமலாபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் மாதவ ரெட்டி, ரவுலபாலம் சி.ஐ. வி.கிருஷ்ணா விசாரணை செய்து வருகின்றனர். விரைவில் குற்றஞ்சாட்டப்பட்ட உதவியாளர் துளசி சுரேஷை கைது செய்து விசாரணை செய்தால் உண்மை நிலவரங்கள் தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.