குண்டூர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் இந்தி மொழி ஆசிரியராக ரவி பாபு என்பவர் பணியாற்றிவருகிறார்.
பள்ளியில் தாக்குதல்
ரவி பாபு வகுப்பறையில் ஒரு மாணவியிடம் அத்துமீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அந்த மாணவியின் உறவினர்கள் கும்பலாக சேர்ந்து பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே கடுமையாக தாக்கியுள்ளனர். ரவி பாபு அடிவாங்குவதை தடுக்க முயன்ற பிற ஆசிரியர்களும் மாணவியின் உறவினர்களால் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
ஆனால், அந்த மாணவியிடம் எந்தவித்திலும் அத்துமீறவில்லை என்றும், கல்வி ரீதியாக அவரை கண்டிக்க மட்டுமே செய்தேன் எனவும் ஆசிரியர் விளக்கமளித்துள்ளார். மேலும், மாணவியின் உறவினர்கள், ரவி பாபு ஆகிய இருதரப்பினரும் மற்றொருவர் மீது தனித்தனி புகார்கள் அளித்துள்ளதை அடுத்து, காவல் துறையினர் உண்மையைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் கூட்டமைப்பு கண்டனம்
ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு ஆந்திரப் பிரதேச ஆசிரியர் குழு கூட்டமைப்பு (FAPTO) மாநிலத் தலைவர் சுதிர் பாபு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் வரம்பு மீறி செயல்பட்டிருந்தால், தலைமை ஆசிரியரிடம் முறையாக புகார் அளித்திருக்க வேண்டும். அதைவிடுத்து, பள்ளி வளாகத்திலேயே தாக்குதல் நடத்துவது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதை கண்டித்து மாநிலம் முழுவதும் எங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். தாக்குதலுக்கு உள்ளான இந்தி ஆசிரியர் ஒரு நல்ல மனிதர். அவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இதுதொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் சுசரிதாவை சந்தித்து எங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: மைசூரு கூட்டு வன்புணர்வு வழக்கு: ஏழாவது குற்றவாளி கைது!