ஹைதராபாத்: ராமோஜி குழும நிறுவனங்களில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய அட்லூரி ராம்மோகன் ராவ்(87), உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(அக்.22) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் ஜுப்ளி ஹில்ஸில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு ராம்மோகன் ராவின் உடலுக்கு ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவர் ராமோஜி ராவ் அஞ்சலி செலுத்தினார். தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பாரத் பயோடெக் தலைமை இயக்குநர் கிருஷ்ணா எல்லா, அதன் இணை இயக்குநர் சுசித்ரா எல்லா, முன்னாள் மத்திய அமைச்சர் சுஜனா சவுத்ரி, எம்எல்ஏ மஞ்சிரெட்டி கிஷண் ரெட்டி, தயாரிப்பாளர்கள் சதலவாடா சீனிவாச ராவ், பிரசன்ன குமார் உள்ளிட்ட முக்கியப்பிரமுகர்கள் ராம் மோகன ராவ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ராமோஜி ராவின் குடும்பத்தினர் மற்றும் ராமோஜி குழும நிறுவனங்களின் மூத்த ஊழியர்களும், ராம்மோகன் ராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து இன்று(அக்.23) காலை ராம்மோகன் ராவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் ஜுப்ளி ஹில்ஸில் உள்ள மகா பிரஸ்தானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. இதில், அவரது உறவினர்கள், நண்பர்கள், ராமோஜி குழும நிறுவனங்களின் ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
1935ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணத்தின், கிருஷ்ணா மாவட்டம், பெடபருபுடியில் பிறந்த ராம்மோகன் ராவ், 1975ஆம் ஆண்டு ஈநாடு நாளிதழில் தனது பணியைத் தொடங்கினார். 1978ஆம் ஆண்டு ஈநாடு நாளிதழின் இயக்குநராகவும், 1982ஆம் நிர்வாக இயக்குநரானாகவும் பொறுப்பேற்றார்.
1995ஆம் ஆண்டு வரை ஈநாடு நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய அவர், பின்னர் ராமோஜி ஃபிலிம் சிட்டியின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர் ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவின் பால்ய கால நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உபி; ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலர் தீ விபத்தில் உயிரிழப்பு