பெஹ்ரோர்: உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் அடிக் அகமது. சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.. வழக்கு ஒன்றில், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அண்மையில், மருத்துவமனை பரிசோதனைக்காக அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர், பிரயாக்ராஜ் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் அடிக் அகமது செய்தியாளர்களைச் சந்தித்த போது அங்கிருந்த 3 பேர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், உயிரிழந்தார். இந்த தாக்குதலில் அடிக் அகமதுவின் சகோதரர் அஷ்ரப்பும் கொல்லப்பட்டார். இச்சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தாக்குல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவும், நீதி விசாரணைக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் எதிரொலியாக, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி விக்ரம் லேடன், பெஹ்ரோர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். ஜெய்ப்பூர் சிறையில் இருந்து புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் அணிவிக்கப்பட்ட படி நீதிமன்றத்துக்கு அவர் அழைத்து வரப்பட்டார்.
மேலும் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விக்ரம் மீது ஆயுதக்கடத்தல், தாக்குதல், கொலை, கொள்ளை என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்னும் 6 வழக்குகளில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. இன்றைய வழக்கு விசாரணை முடிந்ததும், அவர் மீண்டும் பத்திரமாக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ராஜஸ்தானை சேர்ந்த பிரபல ரவுடி ஜாஸ்ராம் குர்ஜாருக்கும், விக்ரமுக்கும் முன் பகை இருந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன் ஜாஸ்ராம் சுடப்பட்டார். இதற்கு பழிவாங்கும் நோக்கில், கடந்த 2 மாதங்களுக்கு முன் ஜாஸ்ராம் கும்பலைச் சேர்ந்த 2 பெண்கள் விக்ரமை துப்பாக்கியால் சுட்டனர். இதில் காலில் காயம் ஏற்பட்ட அவர், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பேமலி பேக் ஐஸ்கிரீமில் விஷம்.. சிறுவன் பலி; உறவினர் கைது.. கேரளாவில் நடந்தது என்ன?