இடுக்கி(கேரளா): வயது வெறும் எண் மட்டுமே என்பதற்கு ஒரு உதாரணமாக கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 68 வயதான பெண்மணி வாழ்ந்துவருகிறார்.
68 வயதிலும், மரியம்மாகுட்டி வர்கீஸ் தென்னை மரங்களில் ஏறும் இளநீர் பறிக்கும் அளவிற்குத் திடமான ஆரோக்கியத்துடனும், மன வலுவுடனும் வாழ்ந்து வருகிறார். அவரது வயது எதற்கும் தடையாக அமையவில்லை. குறிப்பாக, விவசாயத் தொழில்மேல் உள்ள ஆர்வமிகுதியால் தொடர்ந்து உழைத்து வருகிறார்.
இடுக்கி மாவட்டத்தின் அடிமாலி நகரில் உள்ள இரும்புப்பாலம் பகுதியில் வசிக்கும் வர்கீஸ், தனது 22 வயது முதல் விவசாயம் மேற்கொண்டு வருகிறார். தன் வசம் உள்ள மூன்றரை ஏக்கர் நிலத்தை, தனது வாழ்வின் சொர்க்கபுரியாக மாற்றியுள்ள மரியம்மாகுட்டி வர்கீஸ், தனது வாழ்வு என்னும் போர்க்களத்தில் அத்தனை தடைகளையும் தகர்த்து வாழ்ந்து வருகிறார்.
தினமும் காலை 6 மணிக்கு வேலையைத் தொடங்கும் அவர், ரப்பர் தோட்டத்தை மேற்பார்வையிடுதல்; ஆடு, மாடுகளை கவனித்தல்; மிளகு, ஏலக்காய், சாதிக்காய், இளநீர் ஆகியவற்றைக் கவனித்தல் என நாள் முழுவதும் ஓட்டமும் நடையுமாகவே தற்போது சுறுசுறுப்பாக சுற்றிவருகிறார்.
![மரியக்குட்டி வர்கீஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14779672_662_14779672_1647743129855.png)
அஸ்தமிக்காத சூரியன்கள்
அதாவது, மரியம்மாகுட்டி தனது தென்னை தோட்டத்தில் யாரும் வேலையாட்கள் வரவில்லை என்றால், சற்றும் தயங்காமல் தென்னை மரமேறி இளநீரைப் பறித்து வீசும் அளவிற்கு சுணக்கமின்றி வேலை பார்க்கிறார். மேலும், சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவில் பெண்கள் சுய உதவிக்குழுவான 'குடும்பஸ்ரீ'-இல் இளநீர் பறிக்க கற்றுத்தரும் சிறப்பு வகுப்பில் கலந்துகொண்டு பயிற்சிபெற்றுள்ளார். மரம் ஏறுவதற்கு என்று தனிக்கருவியும் வைத்துள்ளார்.
தனது கணவன் இறந்தபின், இரண்டு குழந்தைகளுடன் தனித்து நின்ற மரியம்மாகுட்டி, வீட்டில் ஒடுங்கி இருக்க விரும்பவில்லை. அதற்குப் பதிலாக விவசாயத்தில் கவனத்தை செலுத்தி, தனது பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுத்துள்ளார். அதன்பின்பும், அவர் எதிலிருந்தும் ஓய்வெடுக்க விரும்பவில்லை.
"எனக்கு எப்போதுமே விவசாய வேலை பார்க்க அலுப்பு ஏற்பட்டதில்லை. அதை சூரியன் அஸ்தமிக்கும் வரை நான் செய்துகொண்ட இருப்பேன்" என்கிறார் மரியம்மாகுட்டி வர்கீஸ். ஆம், மரியம்மாகுட்டி போன்றவர்களுக்கு சூரியன் என்றுமே அஸ்தமிக்காது என்பதே நிதர்சனம்.
இதையும் படிங்க: தினமும் 22 கி.மீ. சைக்கிளிங்: மன ஆரோக்கியத்துடன் வாழும் 81 வயது மூதாட்டி