'லவ் ஜிஹாத்' குறித்து கடந்த சில மாதங்களாக சலசலப்பு நிலவிவரும் சூழலில், திருமணம் செய்துகொள்ளும் மணமக்களுக்கு இடையே மதம், வேலை உள்ளிட்டவற்றில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர ஏதுவாக புது சட்டம் குறித்து அரசு பரிசீலித்துவருவதாக அஸ்ஸாம் சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, "மணமக்களிடையே வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. ஒருவரது மதம், வருமானத்திற்கு என்ன செய்கிறோம் ஆகியவற்றை மற்றவருக்கு வெளிப்படுத்த வேண்டியது முக்கியம்.
இது 'லவ் ஜிஹாத்' என்று அழைக்கப்படுவது குறித்த சட்டம் அல்ல. அடையாளம், வேலை மற்றும் வருமானத்தை ஒருவர் மறைக்கக் கூடாது என்பதே எனது எண்ணம். எந்த மதத்திற்கும் எதிரானதாக இல்லாத வகையில் ஒரு சட்டத்தை அஸ்ஸாம் இயற்றப்போகிறது. இது திருமணத்திற்குத் தேவையான வெளிப்படைத்தன்மையை தரும். இந்தச் சட்டத்தை உருவாக்கும் பணிகளில் நாங்கள் ஈடுபட்டுவருகிறோம்.
இந்தச் சட்டம் அனைத்து திருமணங்களுக்கும் பொருந்தும். மதம் மட்டுமின்றி பெண் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் தெரிவிக்கும் வகையில் இச்சட்டம் உருவாக்கப்படும். இது மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் சட்டங்களைப் போல இருக்காது. இது பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும்" என்றார்.
உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் கடந்த மாதம் உ.பி. சட்டவிரோத மதம் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் லவ் ஜிஹாத் தொடர்பான குற்றங்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க முடியும். இதேபோன்ற ஒரு சட்டத்தை மத்தியப் பிரதேசமும் கொண்டுவந்துள்ளது.
மாநில அரசுகள் இதுபோன்ற சட்டங்களைக் கொண்டுவந்திருந்தாலும், மத்திய அரசு, லவ் ஜிஹாத் என்ற வார்த்தையை தற்போதுள்ள சட்டங்களில் விளக்கப்படவில்லை என்று கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: வாக்களித்த 135 வயது மூதாட்டி!