கவுகாத்தி: மாநிலத்தில் வெள்ளத்தில் இறந்தோர் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 28 மாவட்டங்களில் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோபிலி, பராக், குஷியாரா ஆகிய ஆறுகளில் நீர் அளவு அபாய அளவை விட சற்று குறைந்துள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக நீரில் மூழ்கியுள்ள சில்சார் நகரத்தில், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு, குடிநீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இரண்டு நாட்களாக சில்ச்சரை பார்வையிட்டு மதிப்பாய்வு செய்தார். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். பெட்குண்டியில் உள்ள வாய்க்கால் உடைந்ததைத் தொடர்ந்து, சில்சார் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு 3575 உணவுப் பொட்டலங்களை கவுகாத்தி மற்றும் ஜோர்ஹாட்டில் இருந்து சில்ச்சாருக்கு கொண்டு சென்றுள்ளது. இதற்கிடையில், மாநிலம் முழுவதும் 75 வட்டங்களின் கீழ் உள்ள 2,542 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 2,17,413 பேர் 564 நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதனிடையே பெரும்பாலான ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதால் வெள்ளம் குறைந்து வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், கச்சார் மாவட்டத்தின் முக்கிய நகரமான சில்சாரில் அதிக பாதிப்பு உள்ளதாகவும், பல பகுதிகள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:மும்பையில் இடிந்த நான்கு மாடி கட்டடம் - மீட்பு பணி தீவிரம்