பாட்னா (பிகார்): ரயில்வே தேர்வாணையம் நடத்திய பணியிட தகுதித் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தேர்வெழுதிய பலர் பிகார் மாநிலம், கயா நகரில் போராட்டத்தில் ஈடுபட்டு ரயில்களுக்கு தீ வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பெரும் சிரமத்திற்குப் பிறகு கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசி, காவல் துறையினர் போராட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.
இது குறித்து கயா காவல் கண்காணிப்பாளர் ஆதித்யா குமார் கூறுகையில், 'ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேர்வெழுதியவர்கள் மற்றவர்களின் பேச்சுகளைக் கேட்டு அரசாங்க சொத்துகளை சேதப்படுத்தக்கூடாது. இந்தச் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது' எனத் தெரிவித்தார்.
தேர்வு முறைகேடு குறித்து போராட்டக்காரர் தெரிவித்திருப்பதாவது, 'CBT இரண்டாம் தேர்வு குறித்து முன்னர் எந்த விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை.
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளும் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால் CBT இரண்டாம் தேர்வினை ரத்து செய்துவிட்டு தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்' என்றார்.
போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 'தேர்வெழுதியவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
தேர்வெழுதியவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும். மேலும், போராட்டக்காரர்கள் ரயில்களை சேதப்படுத்துவது, அவர்களுக்கு உரித்தான சொத்துகளைச் சேதப்படுத்துவதற்குச் சமமாகும்.
தேர்வெழுதியவர்களின் கோரிக்கை அனைத்தையும் அறிந்து, அதை அறிக்கையாகத் தாக்கல் செய்து சம்பந்தப்பட்ட குழுவிடம் சமர்ப்பிக்க ரயில்வே தேர்வாணையத் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இதற்காக மின்னஞ்சல் முகவரி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது' எனக் கூறினார்.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று ரயில்வே தேர்வாணையம் நடத்திய தொழில்நுட்பம் சாரா தேர்வு எழுதியவர்கள், அத்தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி பிகார் ஷெரீஃப் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: ரயில்வே தேர்வு முடிவுக்களுக்கு எதிராக மாணவர்கள் பெரும் போராட்டம்