தேஜ்பூர்(அஸ்ஸாம்): அருணாச்சல பிரதேச இளைஞர் மிராம் டெரோன், சீன ராணுவத்தின் பிடியிலிருந்து திரும்பியது அந்த மாநிலத்தில் உள்ள மற்றொரு குடும்பத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இவர் வருகையை அறிந்த, ஷி யோமி மாவட்டத்தைச் சேர்ந்த அமோனி டிரோ புலோம் என்ற பெண் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பி.எல்.ஏ வீரர்களால் தனது மாமனார் தபோர் புலோம் அழைத்துச் செல்லப்பட்டார். இன்னும் அவர் வரவில்லை.
கடந்த 2015 ஆகஸ்ட் மாதம், எனது மாமனார் தபோர் புலோம், தனது நண்பர் டாக்கா யோர்ச்சியுடன், வேட்டையாடுவதற்காக இந்திய - சீனா எல்லைப் பகுதிக்கு சென்றார்.
சில நாள்கள் கழித்து யோர்ச்சி மட்டும் வீடு திரும்பினார். இருவரும் வேட்டையாடும்போது சில சீன வீரர்கள் எனது மாமனார் தபோரை அழைத்துச் சென்றதாக, யோர்ச்சி கூறினார்.
ஆனால், எனது மாமனாரை சீன ராணுவத்தினர் அழைத்துச்செல்வதைக் கண்டு பயந்துபோன யோர்ச்சி, இதுகுறித்து முதலில் தெரிவிக்கவில்லை. இருப்பினும், பின்னர் அவர் எல்லாவற்றையும் கூறினார். இதையடுத்து நானும் எனது கணவர் பிகி புலோமும், அவ்விடத்திற்குச் சென்றோம்.
அங்கு எனதுமாமனார் எடுத்துச்சென்ற பாத்திரங்கள், அவரது ஜாக்கெட் மற்றும் வேட்டைத் துப்பாக்கி ஆகியவை கிடந்தன. இந்த சம்பவம் குறித்து ராணுவ வீரர்களிடம் தெரிவித்தோம். ஆனால் யாரும் எங்களுக்கு உதவவில்லை.
அதே ஆண்டு டிசம்பரில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவை ஒரு திருவிழாவின் போது சந்தித்து சீன பிடியில் இருந்து எனது மாமனாரை விடுவிக்க உதவி கேட்டோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
மீராம் டெரோன் மீண்டும் அழைத்து வரப்பட்டதை ஊடகங்களில் பார்த்தேன். மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உட்பட அனைவரையும் எனது மாமனாரை அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது மாமனார் தபோர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்பது எங்களுக்குத் தெரியாது. சீன வீரர்கள் அவரைக் கொன்றிருந்தால், இறந்தவர்களுக்கான சடங்குகளைச் செய்ய அவரை எங்களிடம் திருப்பித் தர வேண்டும்" என்று அமோனி கூறினார்.
இதையும் படிங்க: வெளிநாடு தப்பிச் செல்ல முன்ற முன்னாள் வங்கி இயக்குனர் எல்லையில் கைது