மதுரா (உத்தரப் பிரதேசம்): கேரள செய்தியாளர் சித்திக் கப்பன் மற்றும் மூன்று பேர் தொடர்புடைய வழக்கு மதுரா கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து அமர்வு நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி யசவந்த் குமார் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவின்படி, “மதுரா மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர், வழக்கு தொடர்பான அனைத்து பதிவுகள், ரிமாண்ட் ஆவணங்கள் போன்றவற்றை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு முதல் நீதிபதி, அமர்வு நீதிமன்றத்திற்கு உடனடியாக மாற்றுவதை உறுதி செய்வார்.
இந்த வழக்கின் மேலதிக விசாரணை கூடுதல் மாவட்ட மற்றும் முதல் அமர்வு நீதிபதி முன்னிலையில் நீதிமன்றத்தில் தொடரும்” என்றார். உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் படுகொலை மற்றும் கூட்டு பாலியல் வன்புணர்வால் மருத்துவமனையில் இறந்த ஒரு பட்டியலின பெண்ணின் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க அந்தக் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் மற்றும் மூன்று பேரை அக்டோபர் 5 ஆம் தேதி மதுரா காவலர்கள் கைது செய்தனர்.
பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புடையவராக கூறப்படும் சித்திக் கப்பன், அதிகுர் ரஹ்மான், ஆலம் மற்றும் மசூத் ஆகியோர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தொடக்கத்தில் மதுரா காவல்துறையின் குற்றப்பிரிவினர் விசாரித்தனர். அதன்பின்னர் வழக்கு உத்தரப் பிரதேச சிறப்பு பணிக்குழுவுக்கு (எஸ்.டி.எஃப்) மாற்றப்பட்டது.
இந்நிலையில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அமர்வு நீதிபதியை தவிர வேறு எந்த நீதிமன்றமும் இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க அதிகாரம் இல்லை” என்று மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கை அமர்வு நீதிபதிக்கு மாற்றக் கோரி துணை போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.டி.எஃப்) ராகேஷ் குமார் பலிவால் விண்ணப்பம் அளித்தார். இதன்பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹத்ராஸ் வழக்கு: 4 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்