கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பான புகாரில், திரிணாமுல் காங்கிரசில் அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி, கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பிறகு அவரது நெருங்கிய தோழியான நடிகை அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டார். தற்போது அர்பிதா முகர்ஜி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அர்பிதாவை காண அவரது தாயார் பலமுறை முயற்சித்தும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில், அர்பிதா முகர்ஜி தனிமையில் வாடுவதாகவும், மிகவும் மோசமாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பகட்டத்தில் சிறை உணவை சாப்பிடாமல் இருந்த அவர், தற்போது சிறையில் கொடுக்கப்படும் உணவை சாப்பிடுகிறார். இருந்தபோதும், தாயார் உள்பட யாரையும் பார்க்க அதிகாரிகள் அனுமதிக்காததால், அவர் மிகவும் தனிமையில் இருப்பதாக தெரிகிறது.