டெல்லி: மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் கீழ் 4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களில் மருத்துவ குணம் உள்ள 1.10 லட்சம் செடிகள் நடப்பட்டுள்ளன.
ஊட்டச்சத்து தோட்டங்கள் அல்லது ஏற்கனவே புழக்கத்தில் உள்ள தோட்டங்களில் கோழி பண்ணை அமைக்கும் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சிறுதானியங்கள் மற்றும் சமையலறை தோட்டம் அமைப்பது குறித்து 75 ஆயிரத்திற்கும் அதிகமான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. புதிய அங்கன்வாடி மையங்களிலோ அல்லது அவற்றுக்கு அருகிலோ ஊட்டச்சத்து தோட்டங்களை அமைப்பதற்கு இடங்களை தேர்வு செய்ய 40,000 முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.
இந்த தோட்டங்கள் மூலம் பழங்கள், காய்கறிகள், மூலிகைகள், தானியங்கள் வளர்க்கப்படும். அதன் மூலம் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்க வழிவகை செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் உள்ளூர் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் வளர்ப்பையும் இந்த திட்டம் ஊக்குவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தமிழ்நாட்டில் முதல்கட்டமாக தேனியில் உள்ள 549 அங்கன்வாடி மையங்களிலும், விழுப்புரத்தில் உள்ள 115 அங்கன்வாடி மையங்களிலும், கோவையில் உள்ள 123 அங்கன்வாடி மையங்களிலும், கிருஷ்ணகிரியில் உள்ள 100 அங்கன்வாடி மையங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக விதைகளை மாவட்ட தோட்டக்கலைத்துறை வழங்கிவருகிறது.
இதையும் படிங்க: 'காத்து வாக்குல ரெண்டு காதல்' - மனைவியின் உதவியுடன் காதலியை கரம்பிடித்த காதலன்