டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 19) தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள், வேளாண் திருத்தச் சட்டம், பெட்ரோல் விலை உயர்வு போன்றவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
200 உழவர்கள் போராட்டம்
ஆனால், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு செயலி மூலம் அரசியல் பிரமுகர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோரை ஒன்றிய அரசு உளவுபார்த்ததாகப் புகார்கள் எழுந்ததையடுத்து, இவ்விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் புயலைக் கிளப்பியது.
இந்நிலையில், வேளாண் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி உழவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். உழவர்கள் ஜந்தர் மந்தரில் தங்களது போராட்டத்தை அமைதியான முறையில் நடத்துவதற்கு டெல்லி காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
ஆனால், நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணிக்கு காவல் துறையினர் அனுமதியளிக்கவில்லை. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் இருப்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உழவர்களின் திட்டம்
முன்னதாக, உழவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்.), நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அமர்வின்போது ஜூலை 22 (நாளை) முதல் ஒவ்வொரு நாளும் சுமார் 200 உழவர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
தொடரும் போராட்டம்
1. அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020, 2. வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, 3. உழவர்களுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம் 2020 ஆகியவற்றை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றியது.
இச்சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் பல்லாயிரக்கணக்கான உழவர்கள் டெல்லியின் எல்லையில் போராட்டம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.