சண்டிகர்: இந்தியாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் உள்ளிட்ட அனைத்து மதங்களுக்கும் அதற்கான தனி திருமணச் சட்டம் உள்ளது. அதேபோல், சீக்கிய மதத்திற்கான தனி திருமணச் சட்டம் "ஆனந்த் திருமணச் சட்டம் 1909" ஆகும். பிரிட்டிஷ் காலத்தில் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் இந்திய பிரிவினைக்குப் பிறகு கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு சீக்கிய திருமணங்கள் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டன.
ஆனால், ஆனந்த் திருமணச் சட்டத்தைக் அமல்படுத்த வேண்டும் என சீக்கிய மதத் தலைவர்கள் பலரும் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். அதன் விளைவாக அச்சட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டது. ஹரியானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட 22 மாநிலங்கள் ஆனந்த் திருமணச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இந்த நிலையில், சண்டிகர் நகர நிர்வாகம் ஆனந்த் திருமணச் சட்டத்தை அங்கீகரித்துள்ளது.
இது தொடர்பாக சண்டிகர் நகர துணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சண்டிகர் நிர்வாகம், ஆனந்த் திருமணச் சட்டம் 1909-ன் கீழ் திருமணத்தைப் பதிவு செய்வதற்கான 'சண்டிகர் ஆனந்த் திருமணப் பதிவு விதிகள் 2018'-ஐ செயல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின்படி சீக்கியர்களின் திருமணம் அங்கீகரிக்கப்படும். உரிய ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு நேரில் சென்று, இச்சட்டத்தின் கீழ் திருமணத்தை பதிவு செய்யலாம்.
மணமக்கள் வயதுச் சான்று, குருத்வாரா சாஹிப் வழங்கிய திருமணச் சான்றிதழ், இரண்டு சாட்சிகளின் அடையாள அட்டை, திருமண விழா புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இச்சட்டத்தின் கீழ் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும். இதற்காக ஏற்கனவே உள்ள இணையதளம் மாற்றி அமைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சண்டிகரில் வாழும் சீக்கியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆனந்த் திருமணச் சட்டம் 1909, பிரிட்டிஷ் காலத்தில் கொண்டுவரப்பட்டது. இது ஆனந்த் கராஜ் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு "மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கிச் செயல்படுதல்" என்று பொருள். இது சீக்கிய குரு அமர் தாஸ் என்பவரால் இயற்றப்பட்டது. இச்சட்டம் முதன் முதலில் 1909ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக்கப்பட்டது. அதன் பிறகு கிடப்பில் போடப்பட்ட நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு, மத்திய அரசு ஆனந்த் திருமணச் சட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்தது.
இதையும் படிங்க: Denying sex: ஓராண்டாக தாம்பத்திய உறவை மறுத்த கணவர் மீது மனைவி போலீசில் புகார்!