டெல்லி: டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "புதிய ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமியின் புகைப்படங்களை அச்சிடலாம். புதிய நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் படமும், மறுபுறம் இந்த இரு தெய்வங்களின் படமும் இடம்பெற வேண்டும்.
நாம் எத்தனை முயற்சிகள் செய்தாலும், சில சமயங்களில் தெய்வங்களின் ஆசீர்வாதம் இல்லை என்றால், அந்த முயற்சிகள் பலனளிக்காது. அதனால், நமது கரன்சி நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்களை வைக்கும்படி பிரதமர் மோடியிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.
ரூபாய் நோட்டுகளில் லட்சுமி-விநாயகர் புகைப்படம் இருந்தால், நம் நாடு செழிக்கும். இதுகுறித்து பிரதமருக்கு ஓரிரு நாட்களில் கடிதம் எழுதுவேன். இந்தோனேசியாவின் ரூபாய் நோட்டில் விநாயகர் உருவம் இடம்பெற்றுள்ளது. இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவால் முடியும்போது, நம்மால் ஏன் முடியாது?
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் செழிப்பாக இருக்க வேண்டும். பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை பெரிய அளவில் திறக்க வேண்டும். டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி தயாராக உள்ளது. டெல்லி மக்கள் பாஜகவை நிராகரிப்பார்கள். குஜராத் தேர்தலில் அனைத்து தீய சக்திகளும் எங்களுக்கு எதிராக அணி சேர்ந்துள்ளன.
டெல்லியில் காற்று மாசு குறைந்துள்ளது. இந்த நடவடிக்கையில் பங்கெடுத்த மக்களுக்கு பாராட்டுகள். ஆனால், நாங்கள் இன்னும் திருப்தி அடையவில்லை. டெல்லியை தூய காற்று கொண்ட நகரமாக மாற்ற விரும்புகிறோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: டெல்லியில் காற்றுமாசு அதிகரிப்பு: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்