நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2ஆவது அலை தீவிரம் அடைந்து வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்பட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட நேரம் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான நடவடிக்கைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
முழு ஊரடங்கு அறிவிப்பால் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் சிக்கல்கள், துன்பங்கள் தொடர்பாக, தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கு விசாரணை இன்று (மே.13) நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கோவிட்-19 இரண்டாவது அலைகளைச் சமாளிக்கப் பல்வேறு மாநிலங்கள் அறிவித்த ஊரடங்களால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைகளை எடுத்துரைத்து ஹர்ஷ் மந்தர், அஞ்சலி பரத்வாஜ் மற்றும் ஜகதீப் சொக்கர் ஆகியோர் தாக்கல் செய்த இடையீட்டு மனுவையும் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.
அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன், ரேஷன் கார்டுகள் இல்லாத புலம்பெயர்ந்தோருக்கு ரேஷன் பொருள்களை வழங்க வழிவகை செய்யும் 'ஆத்ம நிர்பார் திட்டத்தை' விரிவுபடுத்தவும், அவர்களின் இருப்பிடங்களுக்கு சமைத்த உணவை வழங்குவதற்குமான வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
ஊரடங்கின்போது வேலையும் இல்லாமல் இருக்கும் புலம்பெயர்ந்தோரின் கணக்குகளுக்கு பணப் பரிமாற்றத்திற்கான வழிமுறைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து நாட்டிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 8 கோடி என்றும், அவர்களில் பலருக்கு ரேஷன் கார்டுகள் இல்லை என்றும் பூஷன் எடுத்துரைத்தார்.
அப்போது ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பூஷனின் கூற்றை கடுமையாக எதிர்த்தார். கடந்தாண்டு நாடு முழுவதும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து நடவடிக்கைகளும் மூடப்பட்டது. இந்தாண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, கடந்தாண்டை போல அல்ல என்பதை மாநிலங்கள் உறுதி செய்துள்ளன.
பெரிய அளவில் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. அதே போன்று கட்டுப்பாடுகளுடன் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன. எனவே அவர்கள் பணிபுரியும் இடங்களிலிருந்து திரும்பி அனுப்ப தூண்டப்படுவதில்லை. மற்ற விவகாரங்கள் தொடர்பான விவாதங்களை விடுத்து, தொற்று நோய்க்கு எதிராக போராடுவோம் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பல்வேறு மாநிலங்கள் அறிவித்த ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை குறித்து கவலை தெரிவித்தனர். பணம் அல்லது வேலை இல்லாமல் புலம்பெயர்ந்தோர் எவ்வாறு பிழைப்பார்கள்? தற்போதைக்கு உணவு வழங்கப்பட வேண்டும். தற்போது நிலவிவரும் கடுமையான கள நிலவரங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் குறைவான கட்டணத்தில் போக்குவரத்து வசதியை உறுதி செய்வதற்கான உத்தரவுகளை இன்று மாலை (மே.13) பிறப்பிப்பதாகக் கூறினர்.