ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபட்டணத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் ஆனந்தையா தனது சொந்த முயற்சியில் ஆயுர்வேத மருந்தை கண்டுபிடித்து அதை கரோனா தொற்றுக்கு பயன்படுத்தி வந்தார். இந்த மருந்தை உட்கொண்டவர்கள் கரோனா நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
நாளடைவில் இந்த தகவலை அறிந்த சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஆனந்தையாவிடம் மருந்து வாங்க கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். இந்த தகவல் அறிந்து கிருஷ்ணாபட்ணம் வந்த நெல்லூர் மாவட்ட ஆட்சியர் அவர் வழங்கும் மருந்தின் தரத்தை சோதிப்பதற்காக மருந்தைக் கைப்பற்றி மருந்து விநியோகத்திற்கும் தடை விதித்தார். இந்நிலையில், சில நாட்கள் மருந்து விநியோகத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த மருந்தை ஆயுஷ் அமைச்சகம், திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். ஆய்வின் முடிவில், ஆனந்தய்யாவின் மருந்தால் கரோனா சரியாகும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் இந்த மருந்தால் பக்க விளைவு ஏதும் இல்லை எனச் சான்று வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால், ஆக்ஸிஜன் குறைபாடு கொண்ட நோயாளிகளுக்கு கண்ணில் விடப்படும் சொட்டு மருந்துக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதையும் படிங்க; தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கரோனா பாதிப்பு!