ஹைதராபாத் (தெலங்கானா): இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நேற்று (ஜன.23) விளையாடியது. கணவர் விராட் கோலி விளையாடிக் கொண்டிருக்கும் போது மனைவி அனுஷ்கா சர்மா, மகள் வாமிகாவுடன் பெவிலியனில் இருந்தவாறு கைத்தட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.
போட்டி நேரலையின் போது இந்த காட்சி ஒளிபரப்பானது. விராட் கோலி- அனுஷ்கா சர்மாவின் ஒரு வயது மகள் வாமிகாவின் முகம் தெரியும்படி புகைப்படம் முதல் முதலாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டது. மகளுக்கு தனியுரிமை அளிக்கும் வகையில் விராட் கோலி- அனுஷ்கா சர்மா இருவரும் இதுவரை வாமிகாவின் முகத்தை பொதுவெளியில் காண்பிக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று வாமிகாவின் புகைப்படம் வெளியானது குறித்து அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராமில், "நேற்று மைதானத்தில் எடுக்கப்பட்ட எங்கள் மகள் வாமிகாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதை நாங்கள் அறிகிறோம். கேமரா எங்களை நோக்கி இருந்தது தெரியவில்லை. அது தற்செயலாக நடைபெற்றது.
நாங்கள் முன்பு தெரிவித்தவாறு, இந்த விஷயத்தில் எங்களின் நிலைப்பாடும் கோரிக்கையும் அப்படியே இருக்கின்றன. வாமிகாவின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம்; ஆளுநர் தமிழிசை