விஜயநகரம்/காசிப்பூர்: மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் அக்னிபத் போராட்டம் காரணமாக கோர்பா - விஜயநகரம் விரைவு ரயில் கொத்தவலசா சந்திப்பில் நிறுத்தப்பட்டது.
அப்போது, ரயிலில் பயணித்த ஒடிஷாவைச் சேர்ந்த 75 வயதான ஜோகேஷ் என்ற இதய நோயாளிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். போராட்டம் காரணமாக ஆம்புலன்ஸ் கிடைக்காததால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்றிருந்தால், அவர் உயிர் பிழைத்திருப்பார் என அவரது குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர். இங்கு ரயில் போராட்டத்தால் ஒரு உயிர் போன நிலையில், உத்தரபிரதேசத்தில் போராட்டத்தில் சிக்கி நின்றிருந்த ரயிலில் பெண்மணி ஒருவர் ஒரு உயிரை ஈன்றுள்ளார்.
காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள சமானியா ரயில் நிலையத்தில், போராட்டம் காரணமாக விரைவு ரயில் ஒன்று பல மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதில் பயணித்த குடியா தேவி (28) என்ற கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அவருக்கு ரயிலிலேயே குழந்தை பிறந்துள்ளது. பிறகு, தாயும் சேயும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர்.
இதையும் படிங்க: அக்னிபத் போராட்டம் - கண்காணிக்கப்படும் இளைஞர்களின் வாட்ஸ்அப் குழுக்கள்