பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள கஸ்தூரி நகரில் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மூன்று மாடிகள் கொண்ட அந்தக் கட்டடத்தில் மொத்தம் எட்டு வீடுகள் இருந்துள்ளன.
அங்கு குடியிருந்தவர்கள் கட்டடத்தின் மேற்கூரை சரிவதையும், சுவர்களில் விரிசல் ஏற்படுவதையும் கவனித்துள்ளனர். இதனால், முன்னெச்சரிக்கை காரணமாக அக்கட்டடத்தில் இருந்த அனைவரும் இன்று (அக். 8) காலையில் அவர்களின் வீட்டை காலி செய்தனர்.
தொடரும் துயரம்
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
முன்னதாக, கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள பதலா அன்கலாகி என்ற கிராமத்தில் நேற்று (அக். 7) மாலை வீடு இடிந்து விழுந்ததில், மூன்று சிறார்கள் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர். அதற்கு முன்பாக, கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பெங்களூருவில் உள்ள வில்சன் கார்டன் பகுதியில் மூன்றுமாடிக் கட்டடமும், செப்டம்பர் 28ஆம் தேதி பெங்களூரு சிலிக்கான் நகரில் மற்றுமொரு அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.