ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள எஸ்.வி.ஆர் ருயா அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் நிரப்புவதில் 5 நிமிடம் கால தாமதம் ஏற்பட்டதால் கரோனா நோயாளிகள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த மருத்துவமனையில் 700-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த ஆக்ஸிஜன் கையிருப்பு திடீரென தீர்ந்துள்ளது. அதனை மீண்டும் நிரப்ப சிறிது கால தாமதமாகியுள்ளது. ஆக்ஸிஜன் நிரப்ப எடுத்துக் கொள்ளப்பட்ட 5 நிமிடத்திற்குள், மூச்சுத்திணறல் காரணமாக 11 பேர் உயிரிழந்தனர். விரைவாக ஆக்ஸிஜன் சப்ளை கொடுக்கப்பட்டதால், பல நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஆக்ஸிஜன் டேங்கர் வர தாமதமானதால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை ஸ்ரீபெரும்புதூரிலிருந்து மற்றொரு ஆக்ஸிஜன் டேங்கர் லாரி ரியா மருத்துவமனைக்கு வந்தடைந்துள்ளது. இதனை பத்து கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் டேங்கில் மருத்துவமனை ஊழியர்கள் நிரப்பியுள்ளனர்.