டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் பவுரி மாவட்டத்தில் விடுதியில் வரவேற்பாளராக பணிபுரிந்த 19 வயது இளம்பெண் அங்கிதா, கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். கடந்த 24ஆம் தேதி, ரிஷிகேஷில் கால்வாய் ஒன்றிலிருந்து அங்கிதாவின் உடல் மீட்கப்பட்டது.
இந்த கொலை தொடர்பான வழக்கில், விடுதியின் உரிமையாளரும், பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகனுமான புல்கித் ஆர்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விடுதி ஊழியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கிதாவை தன்னுடன் உடலுறவு கொள்ளவும், பாலியல் தொழிலில் ஈடுபடவும் புல்கித் ஆர்யா வற்புறுத்தியதாகவும், அதற்கு ஒத்துழைக்காததால் அவரை கால்வாயில் தள்ளி கொலை செய்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், அங்கிதா கொலை குறித்து அவதூறாக பேசிய ஆர்எஸ்எஸ் பிரமுகர் விபின் கர்ன்வால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அங்கிதா மரணத்திற்கு அவரது தந்தைதான் காரணம் என்றும், பசியுடன் இருந்த பூனைகளுக்கு முன்பு பாலை வைத்த அங்கிதாவின் தந்தைதான் மிகப்பெரிய குற்றவாளி என்றும் விபின் கர்ன்வால் தனது முகநூலில் பதிவிட்டார்.
இந்த பதிவு பிறகு நீக்கப்பட்டது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், ஆர்எஸ்எஸ் பிரமுகர் விபின் கர்ன்வால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள விபின் கர்ன்வாலை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அங்கிதா கொலை வழக்கில் துணை ஆய்வாளர் இடை நீக்கம்