மகாராஷ்டிர மாநிலம் மும்பை அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே, வாகனம் ஒன்று வெடிபொருள்களுடன் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வாகனத்தில் 20 ஜெலட்டின் குச்சிகளுடன் மிரட்டல் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தானேவில், அந்தக் காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரெனின் சடலத்தை காவல் துறையினர் மார்ச் 5ஆம் தேதி கண்டெடுத்தனர்.
இதையடுத்து இவ்விவகாரம் தீவிரமடையவே வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கையிலெடுத்தது. இறந்த மன்சுக்கின் மனைவியை என்ஐஏ விசாரித்ததில், காரை காவல் ஆய்வாளர் சச்சின் வாஸ் நான்கு மாதங்கள் கடன் வாங்கியிருந்ததாகவும், அதனை பிப்ரவரி 5ஆம் தேதிதான் திருப்பி அளித்ததாகவும் அவர் கூறியதாகத் தெரியவந்துள்ளது.
பின்னர், பிப்ரவரி 17இல் அந்தக் கார் திருடப்பட்ட நிலையில், பிப்ரவரி 25 அன்று வெடிபொருள்களுடன் அம்பானியின் வீட்டருகே கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்பிருப்பதாகக் கூறி காவலர் சச்சின் வாஸை என்ஐஏ கைதுசெய்தது. கைதான காவலரை அம்மாநில காவல் துறை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதற்கிடையே, மும்பை காவல் ஆணையராக இருந்த பரம்பீர் சிங் பணியிட மாற்றம்செய்யப்பட்டார். இந்நிலையில், வாஸை மிரட்டி மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மாதத்திற்கு 100 கோடி ரூபாய் கேட்டதாக பரம்பீர் சிங் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
இது குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு பரம்பீர் சிங் எழுதிய கடிதத்தில், "கடந்த சில மாதங்களாக சச்சின் வாஸை அனில் தேஷ்முக் தனது இல்லத்திற்குப் பலமுறை அழைத்துள்ளார்.
நகரங்களில் உள்ள வணிக நிறுவனங்களிடம் பணத்தை வாங்கி தன்னிடம் கொடுக்க வற்புறுத்தியுள்ளார். மாதத்திற்கு 100 கோடி ரூபாய் தர வேண்டும் என மிரட்டியுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.