உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம், நாக்தேவ் மலைத்தொடரில் உள்ள சப்லோடி கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவரை, கடந்த 15ஆம் தேதி சிறுத்தை ஒன்று தாக்கி கொன்றது. இதையடுத்து சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டுகளை வைத்தனர்.
நேற்று முன்தினமும் (மே 23) பெண் ஒருவரை சிறுத்தை தாக்கி காயப்படுத்தியதாகத் தெரிகிறது. இந்த நிலையில், சிறுத்தை கூண்டில் சிக்கியதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு புறப்பட்டனர். ஆனால், வனத்துறையினர் அங்கு செல்வதற்கு முன்னதாகவே, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து, கூண்டில் இருந்த சிறுத்தையை உயிரோடு எரித்துள்ளனர். சிறுத்தை பொதுமக்களை தாக்கியதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அதை எரித்துக் கொன்றதாக தெரிகிறது.
சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தை எரிக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு உயர் அலுவலர்களிடம் உரிய அனுமதி பெற்று சிறுத்தையின் சடலத்தை வனத்துறை அலுவலர்களிடம் அடக்கம் செய்தனர். சிறுத்தையை எரித்த கிராம மக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.