ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர், திருப்பதி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து வேலூருக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த அரசு, தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், வழித்தட உரிமம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் இல்லாத காரணத்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 அரசுப் பேருந்துகள், 7 தனியார் பேருந்துகள் என மொத்தம் 23 பேருந்துகள் ஆந்திராவில் இன்று (ஜன.15) பறிமுதல் செய்யப்பட்டன. குப்பம், பலமனேரி, புத்தூர், சித்தூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் இவை பறிமுதல் செய்யப்பட்டதாக அறியமுடிகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், “விழுப்புரம் கோட்டம் வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட 4 பேருந்துகள் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 16 அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் ஆந்திர மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பேருந்துகளை பொறுத்தவரை பேருந்துகள் அனைத்தும் முறையாக வழித்தட உரிமத்துடன்தான் இயக்கப்பட்டுள்ளன. ஆனால், அம்மாநில அரசுப் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதன் எதிரொலியாக சிறுசிறு காரணங்களைக் குறிப்பிட்டு தமிழ்நாடு பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று (ஜன.15) விடுமுறை என்பதால் உடனடியாக பேருந்துகளை விடுவிக்க இயலவில்லை. ஆந்திரப் பிரதேச போக்குவரத்து துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்துகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் (ஜன.13) வழித்தட உரிமமின்றி வேலூரில் இயங்கிய ஆந்திரப் பிரதேச அரசுக்கு சொந்தமான 5 பேருந்துகளை அம்மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்திருந்தனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட 5 பேருந்துகளும் இன்று விடுவிக்கப்பட்டன. எனினும், அவற்றின் மீது அபராதம் விதிக்கப்படும் என வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : “புதுச்சேரியிலும் திமுக தலைமையிலான ஆட்சி” - காங்கிரசுக்கு செக் வைக்கிறதா திமுக?