அமராவதி: மார்கதர்சி சிட் பண்ட் வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 30ஆம் தேதி ஆந்திர மாநில சிட் பதிவாளர் வெளியிட்ட நோட்டீசை எதிர்த்து, மார்கதர்சி சிட் பண்ட் நிறுவனம் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று(ஆகஸ்ட் 11) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மார்கதர்சி சிட் பண்ட் தொடர்பாக சிட் பதிவாளர் வெளியிட்ட நோட்டீசிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நோட்டீஸ் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மார்கதர்சி சிட் பண்ட் விவகாரம் தொடர்பாக சந்தாதாரர்கள் தாக்கல் செய்த மனுக்கள் உள்பட அனைத்து மனுக்களையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதன் மூலம், வழக்கு தொடர்பான அனைத்து வாதங்களையும் பரீசிலனை செய்து நியாயமான விசாரணையை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தது.
இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது ஆந்திர அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மார்கதர்சி சிட்பண்ட் குழுமத்தை முடக்கும் ஒரு தலைபட்சமான முடிவுகள் அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை என்றும், முறைகேடுகள் தொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து ஆட்சேபனைகளை பெறவே பொது அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் கூறினார். தாமாக முன்வந்து பொது அறிவிப்பு விடும் அதிகாரம் சிட் பதிவாளர்களுக்கு உள்ளது என்றும், அதற்கு எந்த தரப்பினரிடம் இருந்தும் புகார் மனுக்கள் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.
அப்போது, மார்கதர்சி சிட்பண்ட் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், உதவி பதிவாளர் மற்றும் துணை பதிவாளர் ஆகிய இருவருக்கும் வெவ்வேறு பணிகள் உள்ளதாக தெரிவித்தனர். மேலும், உதவிப் பதிவாளர் ஆய்வு நடத்தி, துணைப் பதிவாளர் சிட் குழுக்களை தக்கவைத்ததற்கு எதிராக ஆட்சேபனைகளை பெற்றது செல்லாது என்றும் மார்கதர்சி தரப்பில் வாதிடப்பட்டது.
ஒரு நீதிபதியின் வாதங்களைக் கேட்டு மற்றொரு நீதிபதி தீர்ப்பு வழங்கியது போல், அதிகாரிகளின் நடவடிக்கை இருந்ததாக வழக்கறிஞர்கள் வாதிட்டனர். மார்கதர்சி சிட் நிறுவனம் பணத்தை செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்படவில்லை என்றும், அப்படியானால், சிட் குழுவைத் தடுக்க தானாக நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மார்கதர்சி சிட்பண்ட் வழக்கில் வாதம் நிறைவு.. இடைக்கால தடை மீதான முடிவு நிறுத்தம்!