ஆந்திரப் பிரதேச அரசு சார்பாக ஆயுள் தண்டனை பெற்று 5 வருடங்களுக்கு மேல் சிறையில் இருக்கும் பெண் கைதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சிறைச்சாலை அலுவலர்கள் 53 பேர் கொண்ட தகுதியானவர்கள் பட்டியலை அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
அதில் பெரும்பாலானோர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடாதவர்களாகவும், சூழ்நிலை கைதிகளாகவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்தப் பட்டியலை உள்துறை செயலகம் மற்றும் தலைமைச் செயலக அலுவலர்கள் மதிப்பாய்வு செய்தனர்.
இந்நிலையில் 53 மகளிர் கைதிகளை தண்டனை காலத்திற்கு முன்கூட்டியே விடுவிப்பதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை ஆந்திரப் பிரதேச அரசு வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் உள்ள பல்வேறு மகளிரும் பட்டப்படிப்பு முடித்தவர்களாகவும், டெய்லரிங் உள்ளிட்ட கைவினை தொழில்கள் கற்றவர்களாகவும் இருக்கின்றனர்.
அதேபோல் தண்டனை காலம் முடியும் வரை ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறையும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும், அனைவரும் ரூ. 50 ஆயிரம் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
53 பேர் கொண்ட பட்டியலில் 19 பேர் மகளிருக்கான சிறப்பு ராஜமகேந்திரவரம் சிறையிலும், 27 பேர் கடப்பா சிறையிலும், 2 பேர் விசாகப்பட்டினம் சிறையிலும், 5 பேர் நெல்லூர் சிறையிலும் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாற்பது மணி நேரத்துக்கும் மேலாக மாயமான விமானியைத் தேடும் பணி தீவிரம்!