டெல்லி: ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதி, பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று (ஜன.23) பராக்கிரம தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டும் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக கலந்து கொண்டு, தீவுகளுக்கு பெயர் சூட்டினார். மேஜர் சோம்நாத் ஷர்மா, நாயக் ஜதுநாத் சிங், மேஜர் பிரு சிங், கேப்டன் விக்ரம் பத்ரா உள்ளிட்டோரின் பெயர்கள் வைக்கப்பட்டன.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, அந்தமான் நிக்கோபார் தீவுகளின் முக்கியத்துவத்தையும் பெருமைகளையும் எடுத்துரைத்தார். அவர் பேசும்போது, "சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக மூவர்ணக் கொடி ஏற்றப்பட்ட இடம் அந்தமான். அதேபோல் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக அரசாங்கம் அமைந்த இடம் அந்தமான். இன்று நேதாஜி சுபாஷ் போஸின் பிறந்தநாள். இந்த நாள் இந்தியாவில் பராக்கிரம திவாஸ் ஆக கொண்டாடப்படுகிறது.
வீர் சாவர்க்கர் மற்றும் நாட்டுக்காகப் போராடிய பல மாவீரர்களும் இந்த அந்தமானின் சிறையில் அடைக்கப்பட்டனர். சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு நான் போர்ட் பிளேயருக்குச் சென்று, அங்குள்ள 3 முக்கிய தீவுகளுக்கு இந்தியப் பெயர்களை சூட்டினேன். நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கும், பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களுக்கும் எனது மரியாதையை செலுத்துகிறேன்.
அந்தமானில் நேதாஜி முதன்முதலில் மூவர்ணக் கொடியை ஏற்றிய இடத்தில் உள்ள வானளாவிய மூவர்ணக் கொடி, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் வலிமையைப் போற்றுகிறது. இப்பகுதிகளுக்கு வரும் மக்கள், கடலோரத்தில் மூவர்ணக் கொடி பறப்பைப் பார்க்கும்போது அவர்களிடையே தேசபக்தியை அதிகரிக்கச் செய்கிறது" என்று கூறினார்.