இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் கடந்த ஆறு மாதங்களில் வாரத்திற்கு சராசரியாக 1,738 முறை சைபர் தாக்குதலை எதிர்கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வை செக் பாயிண்ட் ரிசர்ச் நிறுவனம் நடத்தியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவில் கல்வி , ஆராய்ச்சி, அரசு, ராணுவம், காப்பீடு, உற்பத்தி, சுகாதாரம் ஆகிய துறைகளை குறிவைத்துதான் அதிகளவில் சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளன.
கோவிட்-19 தொற்று காலத்தில், உலகளவில் ரான்சம்வேர் சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை 93 விழுக்காடு அதிகரித்துள்ளதாக "சைபர் தாக்குதல் ட்ரெண்ட்ஸ்: 2021 அறிக்கை"(‘Cyber Attack Trends: 2021 Mid-Year Report') கூறுகிறது.
அதிகபட்சமாக (சுமார் 1,338 நிறுவனங்கள்) இந்தாண்டில் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் தாக்குதல்கள் நடந்துள்ளன அடுத்தபடியாக ஐரோப்பாவில் 777 நிறுவனங்களிலும், அமெரிக்காவில் 688 நிறுவனங்களிலும் சைபர் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.
இதுகுறித்து பேசிய செக் பாயிண்ட் ரிசர்ச் நிறுவனத்தின் ஆராய்ச்சி துணைத் தலைவர் மாயா ஹோரோவிட்ஸ், " 2021 ஆண்டின் முதல் பாதியில், சைபர் குற்றவாளிகள் தங்களது தாக்குதல் முறையை மாற்றியமைத்துள்ளனர். அதிக இடையூறுகளை ஏற்படுத்துவதற்காகக் குறிப்பிட்ட நிறுவனத்தின் நெட்வொர்க் இணைப்புகளை இலக்காக வைத்து செயல்படுகின்றனர்.
இந்தாண்டில், சைபர் தாக்குதல் எண்ணிக்கை புதிய சாதனையை படைத்துள்ளது. குறிப்பாக, சோலார் வின்ட்ஸ், கோலனியர் பைப் லைன், ஜேபிஎஸ், கயாசா ஆகிய நிறுவனங்கள் அதிக தாக்குதல்களை சந்தித்துள்ளன.
ரான்சம்வேர் தாக்குதல் தற்போது நிறுவனத்தை மட்டும் குறிவைப்பது இல்லை. அதன் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள், விற்பனையாளர்கள் என அனைவருக்கும் குறி வைக்கிறது" என்றார். மேலும், 2021இன் இரண்டாம் பாதியிலும் நிச்சயம் சைபர் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: சீனா டூ திபெத் - முதல் முழு மின்மயமாக்கப்பட்ட புல்லட் ரயில்!