இமயமலைப் பகுதியில் நீண்ட நாட்களாக சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டு வந்தாலும் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படவில்லை. குறிப்பாக வடமேற்கு இமயமலைப் பகுதியில் நீண்ட நாட்களாக பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர், 1905 ஆம் ஆண்டு இமாச்சலத்தின் காங்க்ராவில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
தொடர்ந்து 1934, ஜனவரி 15 அன்று பிகார் - நேபாள எல்லையில் 8.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து, வடமேற்கு இமயமலைப் பகுதியில் பெரிய அளவிலான பாதிப்பு எதுவும் இல்லை. இதுபோன்ற நிலையில், உத்தரகாண்ட்டில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் உறுதியாகக் கூறுகின்றனர்.
அதிலும் ரிக்டர் அளவுகோலில் 8 க்கும் அதிகமான அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனால் எப்போது வரும் என்பது உறுதியாக தெரியவில்லை. எவ்வாறு இருந்தாலும் அது கண்டிப்பாக வரும் என்கிறார், சிங்கப்பூர் ஆசிய நில அதிர்வு ஆணையத்தின் இயக்குநர் பரமேஷ் பானர்ஜி.
இதற்கு முன்னதாக உத்தரகாண்டில் 1991 ஆம் ஆண்டில் உத்தரகாசி மற்றும் சாமோலியில் 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் அதன்பிறகு பெரிய அளவில் நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில், அடிக்கடி ஏற்படும் சிறிய நிலநடுக்கங்களால் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் இல்லை என்ற அனுமானத்தையும் விஞ்ஞானிகள் மறுக்கின்றனர். ஜப்பான் மற்றும் சீனாவில் அதிக நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. இதற்கான ஆய்வுகளும் அங்கு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜப்பானில் 2,000 க்கும் மேற்பட்ட ஜிபிஎஸ் அமைப்புகள் நிறுவப்பட்டிருப்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் இந்தியாவில் அதிக நிலநடுக்கம் உணரப்படும் இமயமலைப் பகுதியில், அத்தகைய அமைப்புகள் எதுவும் இல்லை எனவும் பரமேஷ் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அந்தமான் தலைநகரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்