போபால் : இந்தியாவில் மீண்டும் சிவிங்கிப் புலிகள் இனத்தை கொண்டு வரும் விதமாக கடந்த ஆண்டு நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து 5 பெண், 3 ஆண் சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து விமானம் மூலம் மேலும் 12 சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி தனது 72வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகளை மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் திறந்துவிட்டார். இந்நிலையில் குனோ தேசிய பூங்காவில் இருந்த சிவிங்கிப் புலி ஒன்று உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
பூங்காவின் முதன்மை வன பாதுகாவலர் கூறுகையில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட உதய் என்ற சிவிங்கிப் புலி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் உயிரிழந்தது என்றார். கடந்த சில நாட்களாக உதய் சிவிங்கிப் புலி உடல் நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்ததாகவும் மருத்துவர்களை கொண்டு தொடர் சிகிச்சை அளித்து வந்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக வன பாதுகாவலர்கள் தெரிவித்து உள்ளனர்.
இறந்த போன உதய் சிவிங்கிப் புலிக்கு 6 வயது இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. என்ன காரணத்திற்காக உதய் சிவிங்கிப் புலி உயிரிழந்தது என அறிய பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
குனோ தேசிய பூங்காவில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த இரண்டாவது சிவிங்கிப் புலி உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஷாஷா என்ற பெண் சிவிங்கிப் புலி கடந்த மார்ச் மாதம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் மற்றொரு சிவிங்கிப் புலி உயிரிழந்து உள்ளது.
இதனால் நமீபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஒட்டுமொத்தமாக கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 18 ஆக குறைந்து உள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் பூங்காவை விட்டு வெளியேறிய மற்றொரு சிவிங்கிப் புலியை மீண்டும் பூங்காவிற்குள் கொண்டு வரும் முயற்சியில் வனத் துறை ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
ஒபன் என அழைக்கப்படும் அந்த சிவிங்கிப் புலி நமீபியா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் பூங்காவில் இருந்து வெளியேறிய சிறுத்தை புலி உத்தர பிரதேச மாநிலத்தின் எல்லை கிராமத்திற்குள் புகுந்தது. ஊருக்குள் புகுந்த சிவிங்கிப் புலி அங்கிருந்த கால்நடைகளை அடித்துக் கொன்றது.
இதனால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகினர். கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே ஒபன் சிவிங்கிப் புலியை மீண்டும் பூங்காவிற்குள் கொண்டு வரும் முயற்சியில் வனத் துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது - கேரளாவில் பலத்த பாதுகாப்பு!