பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் திருவில்வமலை பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் - செளமியா தம்பதிக்கு ஆதித்யஶ்ரீ என்ற 8 வயது மகள் இருந்தார். ஆதித்யஶ்ரீ திருவில்வமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
சிறுமி ஆதித்யஶ்ரீ தந்தையின் செல்போனை அடிக்கடி எடுத்துப் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். செல்போனில் விளையாடுவது, வீடியோ பார்ப்பது போன்றவற்றை செய்து வந்தார். பெற்றோரும் இதனைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது.
இந்தச் சூழலில், நேற்று(ஏப்.24) இரவு சிறுமி தனது தந்தையின் செல்போனை எடுத்து வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென செல்போன் வெடித்தது. சத்தம் கேட்ட பெற்றோர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது சிறுமி முகத்தில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அருகில் செல்போன் வெடித்து சிதறிக் கிடந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பழையனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களது ஒரே மகளை பறிகொடுத்த பெற்றோர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். சார்ஜ் குறைவாக இருந்த செல்போனை சிறுமி பயன்படுத்திக் கொண்டிருந்ததாகவும், அதன் காரணமாக சூடாகி செல்போன் வெடித்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது குழந்தைகளும் அதிகம் செல்போன் பயன்படுத்தும் சூழல் உள்ளது. சில வீடுகளில் பெற்றோர்களே குழந்தைகளுக்கு விளையாட செல்போனை கொடுக்கிறார்கள். குழந்தைகள் நீண்ட நேரம் செல்போனில் விளையாடுவதால் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனை அறிந்து பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: செல்போன் வெடித்து பறிபோன மாணவர் உயிர்... தவிர்ப்பது எப்படி...
இதையும் படிங்க: இரவு முழுவதும் சார்ஜ் போட்டதால் மாணவருக்கு ஏற்பட்ட விபரீதம்