திருவனந்தபுரம்: இன்னும் இரண்டு வாரங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேரளத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக அட்டவணைபடி அவர் தலசேரியில் பரப்புரை மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் அவர் அங்கு செல்லாமல் முதலில் திரிபூனிதாராவில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, “இந்து கோயில்கள் தொடர்பான விவகாரங்களில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு தலையிடக் கூடாது என்று கண்டித்தார். தொடர்ந்து பரப்புரை மேற்கொண்ட அமித் ஷா, “பினராயி விஜயன் ஆட்சிக் காலத்தில் கேரளா ஊழலின் மையமாக மாறிவிட்டது” என்று குற்றஞ்சாட்டினார். தலசேரி பாஜக வேட்பாளர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் அமித் ஷா அங்கு பரப்புரையை தவிர்த்தார்.
சபரிமலை, திருச்சூர் உள்ளிட்ட கோயில் நகரங்களில் பாஜக தனது பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் மாநிலத்தில் போலி வாக்காளர்கள் சரியாக நீக்கப்படவில்லை என எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. பாஜக தனது தேர்தல் அறிக்கையில், “சபரிமலை பாதுகாப்பு, லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, உயர்நிலைப் பள்ளி மாணவ-மாணவியருக்கு மடிக்கணிணி” உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.
தமிழ்நாட்டை போன்று கேரளத்திலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் மே2ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.
இதையும் படிங்க: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன்