அசாம் : கலவர பூமியாக விளங்கும் மணிப்பூருக்கு விரைவில் சென்று அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண உள்ளதாகவும் அனைத்து தரப்பு மக்களிடமும் அமைதியை வேண்ட உள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
அசாம் மாநிலம் கம்ரப் மாவட்டத்தில் உள்ள சாங்சரியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர், விரைவில் மணிப்பூர் சென்று அங்கு மூன்று நாட்கள் தங்க உள்ளதாகவும், அங்குள்ள இரு குழுக்களுக்கு இடையே நிலவும் பிரச்சினை, அவநம்பிக்கை மற்றும் சந்தேகத்தை நீக்கி மாநிலத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
கலவரத்தால் மாநிலத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ள நிலையில், இரு குழுக்களும் கலவரத்தை கைவிட்டு அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று அமித் ஷா கேட்டுக் கொண்டார். அசாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் உஷா, பாஜக தலைமையிலான ஹிமந்த பிஸ்வ சர்மாவின் இரண்டு ஆண்டுகால ஆட்சி நிறைவு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
முன்னதாக கடந்த மே. 11ஆம் தேதியே அமித் ஷா கலந்து கொள்ள இருந்த விழாக்கள் திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், மணிப்பூர் கலவரம் காரணமாக தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நடந்த நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்து கொண்டு தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் அடிக்கல்லை நாட்டினார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மெய்டி சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள் கடந்த 3ஆம் தேதி பேரணி நடத்தினர். இதில் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. மாநிலமே கலவர பூமியாக காட்சி அளிக்கிறது.
மாநிலம் முழுதும் ஏற்பட்ட இந்த கலவரத்தில் அப்பாவி மக்கள் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 200க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இந்த கலவரத்தில் சேதமாகின. 10 நாட்களுக்கு மேலாக மாநிலத்தில் பதற்றம் நிலவிய நிலையில் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கலவரத்தால் மாநிலம் முழுவதும் 54 ஆயிரம் மக்கள் தங்களது வீடு வாசல்களை இழந்து அகதிகளாக மாறி உள்ளனர். 20 காவல் நிலையங்கள், 2 ஆயிரம் வீடுகள், 150 தேவாலயங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் தீக்கிரையாக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க : Arvind Kejriwal: சரத் பவார் - அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு... தேசிய அரசியலில் ஏற்பட உள்ள திருப்பம் என்ன?