அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் மழை பெய்து வரும் நிலையில், நேற்று (நவ.26) மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக பல பகுதிகளில் பயிர்கள் சேதமடைந்த நிலையில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஓரே நாளில் 20 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநில அவசரநிலை செயல்பாட்டு மையம் அளித்த தகவலின் படி, "மழையின் காரணமாக குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 20 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. காலநிலை மாற்றத்தால் மட்டுமே நேற்று பெய்த மழையில் மின்னல் தாக்கி 20 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
தாஹோத் மாவட்டத்தில் நால்வரும், பருசில் மூவரும், தபி மாவட்டத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், அகமதாபாத், அம்ரேலி, பனஸ்கந்தா, பொடாட், கெடா, மெஹ்சானா, பஞ்சமஹால், சபர்கந்தா, சூரத், சுரேந்திரநகர் மற்றும் தேவபூமி துவாரகா மாவட்டங்களில் ஒருவர் என 20 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில அவசரநிலை செயல்பாட்டு மையத்தின் அதிகாரி தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது X தளத்தில், "குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் மோசமான வானிலை மற்றும் மின்னல் தாக்கியதன் காரணமாக பலர் இறந்த செய்தியை கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த சம்பவத்தில் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன்.உள்ளூர் அதிகாரிகள் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறேன்” என தெரிவித்தார்.
மேலும், திங்கட்கிழமையான இன்று வானிலை மாறி மழை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், குஜராத் மாநில அவசரநிலை செயல்பாட்டு மையம் தரவுகளின் படி, குஜராத்தின் 252 தாலுக்காகளில் 234 தாலுகாவில், ஞாயிற்றுகிழமை மழை கொட்டி தீர்த்துள்ளது. சூரத், சுரேந்திரநகர், கெடா, தபி, பருச் மற்றும் அம்ரேலி மாவட்டங்களில் 16 மணி நேரத்தில் 50-117 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், அனைத்து பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், "ராஜ்கோட்டின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. மேலும், திடீர் மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் பல்வேறு பகுதிகளில் பயிர் சேதம் அடைந்ததை அடுத்து தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள பீங்கான் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அகமதாபாத் இயக்குநர் மனோரமா மொஹந்தி கூறுகையில், "குஜராத் மற்றும் சவுராஷ்டிரா மாவட்டங்களின் சில பகுதிகளில் திங்கள்கிழமை மழை குறைந்து காணப்படும். திடீரென ஏற்பட்ட மழைக்கு வடகிழக்கு அரேபிய கடல் மற்றும் அதை ஒட்டிய சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சியே காரணம்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 31 துண்டுகளாக வெட்டி இளம்பெண் கொடூர கொலை.. திருமணத்தை மீறிய உறவால் நடந்த விபரீதம்!