உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், குவாட்(இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான்) கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தியா பிரதமர் நரேந்திர மோடி , அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கான் மாரிசன், ஜப்பான் பிரதமர் புமியோ ஷிதா ஆகியோர் மெய்நிகர் வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இந்த போர் இன்று எட்டாம் நாளை எட்டியுள்ளது. இந்த போரை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவுக்கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து அழுத்தம் அளித்துவருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஐநா பொதுசபையின் 193 உறுப்பு நாடுகளின் முன் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகள் வாக்களித்தன. ரஷ்யா, பெலாரஸ், எரிட்ரியா, வட கொரியா மற்றும் சிரியா ஆகிய ஐந்து நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
குவாட் அமைப்பில் உள்ள நான்கு நாடுகளில் இந்தியாவைத் தவிர மூன்று நாடுகள் ரஷ்யாவுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இந்தியா எந்தவொரு சார்பு நிலைப்பாட்டையும் எடுக்காமல் போர் நிறுத்தம் என்ற கோரிக்கையை மட்டுமே முன்வைத்துள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாடு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் குவாட் அமைப்பு உறுப்பினர்களுக்கு திருப்திகரமாக இல்லாத சூழலில் குவாட் நாடுகளின் தலைவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்வது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உக்ரைன் போர்: இந்திய மாணவர்கள் பிணையிலா? - வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்