மதுரா : உத்தர பிரதேசம் மாநிலம் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயில் உள்ளது. அங்கு இருந்த காத்ர கேசவ் தேவ் கோயில் இடிக்கப்பட்டு ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டு உள்ளதாகவும், இந்த இடத்தில் கிருஷ்ணர் பிறந்ததால் அந்த இடத்தில் சர்வே செய்யவும், இந்துக்களிடம் ஒப்படைக்கக் கோரியும் மதுரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஷாஹி ஈத்கா மசூதியில் சர்வே எடுக்க உத்தரவிட்டனர்.
மேலும், சர்வே நடைமுறைகள் குறித்து டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ள விசாரணையில் ஆலோசிக்கப்படும் என்று கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
தொடர்ந்து இந்து அமைப்பு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், வழக்கறிஞர்கள் ஆணையத்தால் சர்வே நடத்தக் கோரிய மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதித்து உள்ளதாகவும், சர்வே நடைமுறைகள் குறித்து டிசம்பர் 18ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று கூறினார். மேலும், ஷாஹி ஈத்கா மசூதியின் வாதங்களை நீதிமன்றம் நிராகரித்து உள்ளதாகவும், மசூதியில் இந்து கோயிலின் பல அடையாளங்கள் மற்றும் சின்னங்கள் உள்ளதாகவும் கூறினார்.
அதேநேரம் அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி - 15 எம்.பிக்கள் இடைநீக்கம்! என்ன காரணம்?