டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரத்துசெய்யப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுவிக்கப்பட்டுவந்தனர்.
காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல்
இந்நிலையில், காஷ்மீரில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், அங்கு அமைதியைத் தொடர்ந்து நிலைநாட்டவும், அப்பிராந்தியத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லவும் முனைப்பு காட்டிவருகிறது.
இது குறித்து ஆலோசனை மேற்கொள்ள, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (ஜூன் 24) பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது.
14 தலைவர்களுக்கு அழைப்பு
இதில் பங்கேற்குமாறு காஷ்மீரின் எட்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 14 தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர், காஷ்மீரிலிருந்து புறப்பட்டு டெல்லிக்கு ஏற்கனவே சென்றடைந்துள்ளனர்.
சிறப்பு அந்தஸ்து மீண்டும் கிடைக்குமா?
இந்தக் கூட்டத்தில் குப்கர் கூட்டணி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை பிரதமர் அலுவலகம் இதுவரை வெளியிடவில்லை. என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.
இந்தக் கூட்டத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
கரோனா சான்றிதழ்
கூட்டத்தில் பங்கேற்க வருபவர்கள் கரோனா பரிசோதனை நடத்தி, கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வருமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித அரசியல் நடவடிக்கைகளும் ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்படாத நிலையில், இந்தக் கூட்டம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ராகுல் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!