கண்ணூர்: கேரளா மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் வைத்து, இன்று (ஜூன் 1) ஆலப்புழா - கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் மட்டும் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ரயிலில் பயணித்த பயணிகள் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதனிடையே, இது குறித்து அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து, அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், தீ விபத்துக்குள்ளான ரயில் பெட்டி முற்றிலும் சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் எந்த வித உயிர் சேதமும் இல்லை என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தவறான செயல்களால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், சம்பவ இடத்துக்கு வந்த தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களை சேகரித்து வருகிறது. அதேபோல் இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ஏனென்றால், இதே ஆலப்புழா - கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஏப்ரலில் ஒரு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் டெல்லியின் ஷஹீன் பக்கைச் சேர்ந்த ஷாருக் ஷபி என்பவர், சில பயணிகள் மீது தீப்பொறி உருவாகும் வகையிலான ஸ்பேரையைப் பயன்படுத்தி உள்ளார்.
இந்த சம்பவம் இதே எக்ஸ்பிரஸ் ரயில், கோழிக்கோட்டில் உள்ள எலத்தூரில் வைத்து நிகழ்ந்தது. அப்போது, தீ விபத்தில் இருந்து தப்பிக்க நினைத்து ரயிலில் இருந்து குதித்த ஒரு பெண், ஒரு சிறுமி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரியில் வைத்து ஷபியை மகாராஷ்டிரா காவல் துறையின் தீவிரவாத எதிர்ப்பு குழு மற்றும் மத்திய உளவுத் துறையினர் கைது செய்தனர்.
அதிலும், ஷபியும் இந்த விபத்தில் காயங்கள் உடன் முதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, ரயில்வே தண்டவாளத்தில் இருந்து மர்ம பை ஒன்றைக் கைப்பற்றிய காவல் துறையினர், நீண்ட விசாரணைக்குப் பிறகு ஷபியை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷபிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அதே ரயிலில் தீ விபத்து சம்பவம் நிகழ்ந்திருப்பது ரயில் பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கேரள ரயில் தீ வைப்பு வழக்கு - டெல்லி இளைஞருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!