லக்னோ : 2022 உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அசாதுதீன் ஓவைசி (Asaduddin Owaisi) தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி முன்னாள் அமைச்சரான பாபு சிங் குஷ்வாஹா (Babu Singh Kushwaha) மற்றும் வாமன் மேஷ்ரம் (Waman Meshram) ஆகியோருடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.
இந்தக் கூட்டணி இறுதி செய்யப்பட்டது குறித்து அசாதுதீன் ஓவைசி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். அப்போது அவர், “எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் என 2 முதலமைச்சர்கள் பதவியேற்பார்கள். முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 3 துணை முதலமைச்சர்கள் இருப்பார்கள்” என்றார்.
இதற்கிடையில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, அசாதுதீன் ஒவைசி புதிய கூட்டணியை அமைத்தார்” என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் அமைச்சரான பாபு சிங் குஷ்வாஹா, பாஜக மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். இவர் மக்கள் அதிகாரம் ( Jan Adhikar Party) என்ற கட்சியை உருவாக்கி தற்போதைய தேர்தலில் களம் காண்கிறார். மேலும் இவர் ஒபிசி மக்களிடத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ளார். அதேபோல் மற்றொரு அமைச்சரான வாமன் மேஷ்ரம் பகுஜன் முக்தி கட்சி (Bahujan Mukti Party) என்ற இயக்கத்தை தொடங்கி நடத்திவருகிறார்.
403 தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்.10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3, 7 ஆகிய தினங்களில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாக வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இதையும் படிங்க : UP polls: வீடு வீடாக வாக்கு சேகரித்த அமித் ஷா!