இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் பரப்புரையை கண்காணிக்கும் வகையில் மூத்த பொறுப்பாளர்களை காங்கிரஸ் நியமித்துள்ளது.
இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், "தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் பரப்புரைப் பணிகள், ஒருங்கிணைப்பை மேற்பார்வையிடும் வகையில் மூத்த பொறுப்பாளர்களை காங்கிரஸ் கட்சியின் தலைவர் நியமித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து இவர்கள் அவர்களின் பணியை மேற்கொள்வர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், மூத்தத் தலைவர் ஷகீல் அகமது ஆகியோர் அஸ்ஸாம் மாநிலத் தேர்தல் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கேரளா மாநிலத்திற்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், கோவா முன்னாள் முதலமைச்சர் லூயிசின்கோ பலேய்ரோ, கர்நாடக மாநில முன்னாள் துணை முதலமைச்சர் ஜி. பரமேஸ்வரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, பள்ளம் ராஜு, மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நிதின் ராவத் ஆகியோர் தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்குவங்க தேர்தல் மேற்பார்வையாளர்களாக மூத்தத் தலைவர்கள் பி.கே. ஹரிபிரசாத், அலாம்கிர் அலாம், பஞ்சாப் மாநில அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.