கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் புலிகேசிநகர் தொகுதியில் அதிமுக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த அன்பரசன் தனது வேட்புமனுவை இன்று (ஏப்.24) வாபஸ் பெற்றார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி இருக்கின்ற சூழலில் கர்நாடகா தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்கு பாஜகவிடம் 3 தொகுதிகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜக மறுப்புத் தெரிவித்ததால், அதிமுக சார்பாக புலிகேசி நகர் தொகுதியில் அன்பரசன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பு சார்பாகவும் 3 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில், புலிகேசிநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது. கோலார் தங்கவயல் தொகுதியில் சுயேச்சையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. காந்திநகர் தொகுதியில் அதிமுக என ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமாரை ஏற்றுக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு காந்திநகர் தொகுதி வேட்பாளர் குமாருக்கு கர்நாடக மாநிலத் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதனால், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் இரண்டு பேர், வேட்புமனுவை வாபஸ் பெறப்போவதாக தகவல் வெளியாகிய நிலையில், அதிமுக சார்பாக புலிகேசிநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அன்பரசன் வாபஸ் பெற்றார்.
கர்நாடக மாநிலத்தின் புலிகேசிநகர் தொகுதியில் வாபஸ் பெற்றது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசினர். இதனை பரிசீலனை செய்து புலிகேசிநகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அன்பரசன் வாபஸ் பெற்றுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மட்டுமே அதிமுக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகும். கர்நாடகா தேர்தலை மையமாக வைத்து 'இரட்டை இலை' சின்னத்தை தனது தரப்பிற்கு உறுதி செய்ய எடப்பாடி பழனிசாமி வகுத்த திட்டம் நிறைவேறியது. இதன் மூலம், தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகாரம் செய்தது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் புலிகேசிநகர் தொகுதியில் அதிமுக வேட்பாளரை வாபஸ் பெற கூறியுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி இருப்பதாலும் அதிமுக வேட்பாளர் வாபஸ் பெற்றதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!